×

வாரச்சந்தையில் 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி கன்டோன் மென்ட் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

 

பல்லாவரம்: பல்லாவரம் சந்தையில் கடைகள் அமைக்க எதிப்பு தெரிவித்த கன்டோன்மென்ட் நிர்வாகத்தை கண்டித்து, வியாபாரிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பல்லாவரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான முறைப்படி இச்சந்தை நடைபெற்று வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களையும், ஆடு, கோழி, புறா, லவ் பேர்ட்ஸ் மற்றும் உயர் ரக நாய் போன்ற செல்லப் பிராணிகளையும் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாரத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த சந்தை தொழிலை மட்டுமே நம்பி ஏராளமான சிறு வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு பல்லாவரம் சந்தையில் கடை வைத்து நடத்துவதற்கு வாடகையாக நாள் ஒன்றிற்குரூ.500 கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு கொடுத்து வந்தனர். இவ்வாறு மொத்தம் 1200 சிறிய கடைகள் இந்த சந்தையில் இயங்கி வந்தன.

இந்நிலையில், பல்லாவரம் கன்டோன்மென்ட் நிர்வாகம் 600 கடைகள் மட்டுமே அமைக்க அனுமதி வழங்க முடியும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனால், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில் கடைகள் அமைப்பதற்காக வந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் உரிய பதிலளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சந்தை நடக்கும் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறுகையில், ‘நாங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பல்லாவரம் சந்தையில் கடைகள் அமைத்து வருகிறோம். எங்களுக்கு வியாபாரம் ஆகிறதோ, இல்லையோ, ஆனால் கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு வாடகையாக தினமும்ரூ.500 முறையாக கொடுத்து வருகிறோம்.

ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகளான கழிப்பறை, நல்ல குடிநீர் வசதி ஆகியவற்றை மட்டும் கன்டோன்மென்ட் நிர்வாகம் தொடர்ந்து செய்து தர மறுத்து வருவதால், துயரத்திற்கு ஆளாகி வருகிறோம். அப்படி இருக்கையில், நேற்று திடீரென 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி, மற்றவர்கள் யாரும் கடைகள் போடக்கூடாது என்று கன்டோன்மென்ட் நிர்வாகம் திட்டவட்டமாக கூறி வருவது எந்த விதத்தில் நியாயம். எங்களது நலனை கருத்தில் கொள்ளாமல் திடீரென கடை போடக்கூடாது என்று கன்டோன்மென்ட் நிர்வாகம் கூறுவது எங்களது வயிற்றில் அடிப்பதாக உள்ளது. கன்டோன்மென்ட் நிர்வாகம் வியாபாரிகளுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினர். வியாபாரிகள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் விரைந்து சென்ற பல்லாவரம் போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

The post வாரச்சந்தையில் 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி கன்டோன் மென்ட் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Cantonment administration ,Pallavaram ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை